மனமும் இதயமும் தூரம் உள்ளவன்
மனமும் இதயமும் தூரம் உள்ள மாட்டை திங்கும் ஆடு நான். என்னதான் மாட்டை தின்றாலும் ஆடுகள் ஒருநாள் வெட்டப்படும் என்று எனக்கு நன்கு தெரிந்தே இருக்கிறது. என்னைப்போன்றே என் உறவினர்களும் மனமும் இதயமும் தூரம் உள்ளவர்கள்தான். உறவுகூட்டத்தில் இருந்த வெகு சில தியாகிகளின் நிழலில் காலம் தள்ளுகிறோம் என்பது என்னைபோன்ற ஆடுகளுக்கு பின்னாளில் தெரியநேர்ந்தது.
காலத்தின் சுழற்சியில் பணம் இருந்தால் கஷ்டத்தை போக்கிகொள்ளலாம் என்ற ஆசையில் பணத்தை தேடி, இக்கணம் கையில் இருப்பதை மதிக்காது புதிய கஷ்டங்களை உருவாக்கி கொண்டிருந்த பைத்திய கூட்டம் நாங்கள். பணம் இருந்தால் தான் கஷ்டப்படும் உறவை தூக்கிவிட முடியும் என்ற ஆசையும். அதற்காகவே பணம் ஈட்ட எங்களை நாங்களே விரட்டினோம். ஆனால் எதிலாவது கஷ்டம் இருக்கிறதா என்ற சுயபரிசோதனை செய்ய மறந்தோம்😀. பணம் கிடைத்தாலும் அதை பயன்படுத்திகொள்ள தெரியாத கவனமற்ற அறிவீலி கூட்டத்தின் அழுத்தத்தில் ஒரு நியாயம் இருப்பதாக தோன்றினாலும் முட்டுகொடுக்க மறந்ததில்லை என்பது இன்னொரு உண்மை.
இந்த பணம் கிட்டியவுடன் என் நெருங்கிய சமூகம் தன் சொந்த வாழ்க்கையின் மேல் control இழந்துவிட்டதாக அவ்வப்போது உணர்கிறேன். அந்த control பற்றி எண்ணவோ பேசவே செயல் செய்யவோ விரும்பவில்லை. என் மீட்பர் மனநிலை என்னிடம் வந்து தன்னை அறிதலும், சுய மரியாதையும், சுத்தமும் இல்லை என்றால்
இந்த பணம் இருந்தும் இல்லாததே என்று சொல்லிக்கொண்டே இருப்பான். நானோ, மீட்பரே, நீ அமைதியாக இரு. இதைசொன்னால் என்னை பைத்தியம் என்று சாபமிடும் இச்சமூகம் என்று ஒவ்வொருமுறையும் அமைதி காப்பேன். அதில் ஒன்றிரெண்டு சிந்திவிடுகிறது. எனக்கும் என் உறவுகளுக்கும் உலகம் வார்த்தையில் இல்லை. ஆதியில் உலகம் செயலில் இருந்தது. தலை வெட்டப்பட்டு வார்த்தை உலகிற்கு சென்ற அபூர்வ ஜந்து நான். ஆனால் என் உறவுகள் என் மொழி உலகைப்பார்த்து வியந்தார்கள்.
அதனால் நீங்கள் நீங்களாகவே இருங்கள், உங்களுக்கு பிடித்ததை செய்யுங்கள் என்று ஒவ்வொருநாளும் சொல்லுவேன். காரணம் இந்த மொழி உலகம் மேலே புற்களும் அதனடியில் முட்களாக நீங்களே இருப்பீர்கள் என்பதையே எனக்கு காட்டியது. ஆனாலும் சில பேர் தன்னை இழந்துவிட்டு முழுவதும் மொழிஉலகிற்கு வந்து ஏமாற்றத்துடன் இருப்பார்கள். பல பேருக்கு இந்த மொழி உலகம் ஒரு வழிப்பாதை அதனாலேயே நீங்களாகவே இருங்கள் என்கிறேன். என்னைபற்றி சில வார்த்தைகள் சொல்லிவிட்டு முடிக்கிறேன்.
இந்த பணத்தை தேட தொடங்கும் போது முழு நாளிலும் நானே வாழ்ந்தேன், பின், சில வருடங்களில் அதிகாலை சில மணிநேரம் வாழ்ந்தேன், இப்போது தூங்கி எழுந்து சில நிமிடங்கள் வாழுகிறேன். அதனூடே என்னை வெளிப்படுத்திவிட வேண்டும் என்ற ஆசையில் 5 நிமிட இடைவெளியில் இந்த எழுத்துக்கள் எழுதினேன். முழுப்படத்தில் சில நிமிடம் இடைவேளை வரும் ஆனால் எனக்கோ இடைவேளை தான் வாழ்வே😀.
நீங்கள் நீங்களாகவே இருங்கள், இருந்துவிடுங்கள்.